EPF-இன் ஓய்வூதியத் திட்டம் - திருமலை கந்தசாமியின் முகநூல் பதிவு

EPF எனப்படும் தொழிலாளர் சேமநலநிதியின் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தை (Employee pension scheme) பற்றி கொஞ்சம் பார்ப்போம். தமிழக அரசு ஊழியரெனில், நீங்கள் GPF ன் கீழ் வருவதால் இந்தப் பதிவு உங்களுக்கான தல்ல.


தனியார் பணியாளர் ஒருவரின் மாத அடிப்படை சம்பளம்(Basic) ரூ 30,000 எனில் அதில் 12% தொகையான  ரூ 3,600 யை நிறுவனம் பிடித்தம் செய்து தொழிலாளர் சேமநலநிதிக்கு பணியாளரின் பங்கீடாக(Employee contribution) அனுப்பும். மேலும் நிறுவனமும் தனது பங்களிப்பாக 12% தொகையான ரூ 3,600 யை தொழிலாளர் சேமநலநிதிக்கு நிறுவனத்தின் பங்கீடாக(Employer contribution) அனுப்பும்.
மொத்தமாக அனுப்பப்படும் தொகை ரூ3,600 + ரூ3,600 =ரூ7,200.



பலரும் நினைப்பது போல இந்த மொத்த தொகையும், தொகைக்கான வட்டியும் பணியாளருக்கு வராது .
நிறுவனம் அனுப்பும் 12% பங்களிப்பை இரண்டாகப் பிரித்து, 8.33%யை  பணியாளரின் ஓய்வூதியத் திட்டத்திலும் (Employee pension scheme), 3.67%யை பணியாளரின் நிறுவன பங்களிப்பாகவும் வரவு வைக்கப்படும்.
பணியாளரின் பங்கீடு ரூ 3,600(12%) + நிறுவனப் பங்கீடு ரூ1,101(3.67%) +  பணியாளரின் ஓய்வூதியத் திட்டம் 2,499(8.33%) = மொத்தம் ரூ7,200.

முந்தைய சேமநல பணியாளர் ஓய்வூதிய விதிப்படி மொத்த அடிப்படை சம்பளத் தொகையின் 8.33%யின் அதிகபட்ச வரம்பாக ரூ15,000 இருந்தது. இதனால் பணியாளரின் மாத அடிப்படை சம்பளம்(Basic) ரூ15,000க்கு மேலிலிருந்தாலும் கூட  அதிகபட்சமாக ரூ 1,249.50 மட்டுமே பிடிக்கப்படும்.
பணியாளரின் பங்கீடு ரூ 3,600(12%) + நிறுவனப் பங்கீடு ரூ 2,350.50( 3.67%)+  பணியாளர் ஓய்வூதியத் திட்டம் ரூ1,249.50(8.33% அதிகபட்ச வரம்பு ரூ15,000) = மொத்தம் ரூ7,200.

புதிய விதியினால் அதிக ஓய்வூதியம் கிடைக்கும் எனப் பல செய்திகளில் படித்திருப்பீர்கள். உண்மை தான், ஆனால் சேமநலநிதியிலிருந்து கிடைக்கும் தொகை குறைந்து விடும். ஒரு எளிய உதாரணம் வழியாக ஒப்பிட்டுப் பார்ப்போம்.

பணியாளர் ஓய்வூதியத் திட்டப் பங்களிப்பு அடிப்படை சம்பள அதிகபட்ச வரம்பு ரூ15,000. (பழைய முறை)
30 ஆண்டுகள் பணி, சம்பளத்தில் எந்த மாற்றமுமில்லை(கணக்கீட்டின் எளிமைக்காக), சராசரி 8% சேமநலநிதி வட்டி எனக்கொண்டால், நிறுவனப் பங்கீடு மூலம் கிடைக்கும் இறுதித் தொகை = ரூ 33,32,099.93.
எதிர்பார்க்கப்படும் மாத ஓய்வூதியம் =  ரூ 6,857.14.
(ஓய்வுக்கு முன்பு அறுபது மாத சராசரி அடிப்படை சம்பளம் * (மொத்த பணி ஆண்டுகள்  + வெகுமதி ஆண்டுகள்(bonus)))/70-> (15,000*32)/70.
(இருபது ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் இரண்டு ஆண்டுகள் வெகுமதி)

பணியாளர் ஓய்வூதியத் திட்டப் பங்களிப்பு அடிப்படை சம்பள அதிகபட்ச வரம்பு எதுவுமில்லை.(புதிய நடைமுறை)
30 ஆண்டுகள் பணி, சம்பளத்தில் எந்த மாற்றமுமில்லை(கணக்கீட்டின் எளிமைக்காக), சராசரி 8% சேமநலநிதி வட்டி எனக்கொண்டால், நிறுவனப் பங்கீடு மூலம் கிடைக்கும் இறுதித் தொகை = ரூ 15,60,792.18
எதிர்பார்க்கப்படும் மாத ஓய்வூதியம் =  ரூ 13,714.29.
(ஓய்வுக்கு முன்பு அறுபது மாத சராசரி அடிப்படை சம்பளம் * (மொத்த பணி ஆண்டுகள்  + வெகுமதி ஆண்டுகள்(bonus)))/70-> (30,000*32)/70.
(இருபது ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் இரண்டு ஆண்டுகள் வெகுமதி)

முழுப்பணியாளர் ஓய்வூதியம் பெற,
1. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஓய்வூதியத் திட்டத்தில் பங்களித்திருக்க வேண்டும்.
2. 58 வயதைக் கடந்திருக்க வேண்டும்.

நிறுவனம் அனுமதிக்கும் பட்சத்தில் நாம் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சில நிறுவனங்கள் புதிய முறைக்கு மாறி விட்டன. https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login .
எந்த முறையில் நீங்கள் உள்ளீர்கள் என இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் .

https://web.umang.gov.in/web/
Umang செயலியின் வழியாகவும் பார்க்கலாம் .

தற்போதைய பணியாளரின் ஓய்வூதியக் கணக்கீட்டில் குறைபாடிருக்கிறது . பணியாளரின் மொத்த ஓய்வூதிய பங்களிப்பைக் கணக்கில் கொள்ளாமல், ஓய்விற்க்கு முந்தைய அறுபது மாத சராசரி மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. இதை விரைவில் மாற்றி விடுவார்கள் என நான் கருதுகிறேன்.

எது நல்லது ?அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

-திருமலை கந்தசாமி

originally a facebook post of Thirumalai kandasami

Comments