அன்ரன் பாலசிங்கம் எழுதிய 'விடுதலை' - சுரேஷ் கண்ணன்

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் எழுதிய 'விடுதலை' என்னும் கட்டுரைத் தொகுதியை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் எம்.ஜி.ஆரின் ரசிகராக, அபிமானியாக, விசுவாசியாக இருந்தால் இந்த நூலை நிச்சயம் வாசிக்காதீர்கள்.

புலிகளின் இயக்கத்திற்கு நிதியுதவி உள்ளிட்ட பல விஷயங்களைச் செய்து ஆதரவுக்கரம் நீட்டியவர் எம்.ஜி.ஆர் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஏனெனில் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது அப்போதைய தமிழகத்தில் முக்கியமான 'எரியும் பிரச்சினையாக' இருந்ததால் கருணாநிதிக்கு எதிராக செக்மேட் வைக்க எம்.ஜி.ஆர் செய்த விஷயங்களுள் இதுவும் ஒன்று.

புலிகளுக்கு எம்.ஜி.ஆர் பல உதவிகள் செய்தவர்தான். ஆனால் இந்த நூலில் எம்.ஜி.ஆருடன் நிகழ்ந்த அனுபவங்களை, சம்பவங்களை அன்ரன் பாலசிங்கம் விவரிக்கும் போது அதன் போக்கின் இடையே எம்.ஜி.ஆர் மீதான உள்குத்தும் அது தொடர்பனை நகைச்சுவையும் அட்டகாசமாக வெளிப்பட்டிருக்கிறது.

உதாரணமாக, எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் பிரபாகரனும் பாலசிங்கமும் அவரது வீட்டில் உணவருந்தும் போது 'நீரிழிவு' நோய் குறித்து எம்.ஜி.ஆர் கூறுவது, அதை பாலசிங்கம் தயக்கத்துடன் மறுப்பது, பிறகு எம்.ஜி.ஆர் ஒரு மருத்துவரை அழைப்பது, பிறகு அந்த மருத்துவர் பாலசிங்கத்திடம் கூறுவது போன்ற சம்பவங்கள் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன.

இதைப் போலவே எம்.ஜி.ஆர் போகிற போக்கில் சொல்லி விட்டுச் செல்லும் வாக்கியங்களையெல்லாம் பண்ருட்டி ராமச்சந்திரன் பிறகு பதட்டத்துடன் பூசி மெழுகுவது போன்ற சம்பவங்கள் புன்னகைக்க வைக்கின்றன.

ஒருபக்கம் நமக்கு பிரமிப்பையூட்டும் ஆளுமைகள், இன்னொரு பக்கம் எத்தனை கோமாளிகளாகவும் அசட்டு சர்வாதிகாரத்துடனும் இருந்தார்கள் என்பதை அறிய இம்மாதிரியான 'வரலாறு'களை வாசிப்பது அவசியம்.

By Suresh Kannan 

Original: https://facebook.com/story.php?story_fbid=pfbid02tgnvqEdVRUqCyCQtPw4yoX8iKpgJv2ctotf83cZAftq3gT3RCPXnQeMNgkyge46hl&id=1622651206

Comments