வீட்டுக் கடனை சீக்கிரம் அடைத்து முடிப்பது எப்படி - Sriram Narayanan

சீக்கிரமே வீட்டுக் கடனை முடிச்சிடணும் என்பது தமிழகம் மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலகளாவிய அளவில் பெரும்பான்மை மக்களின் ஆசை.
வீட்டுக் கடனை சீக்கிரம் அடைத்தல் நல்லதா? அல்லது சர்ப்ளஸ் பணத்தை முதலீடு செய்வது நல்லதா என்பது நீண்ட விவாதத்துக்கு உரியது, அது இப்போது வேண்டாம். கடனை சீக்கிரம் முடிக்க நினைப்போருக்கான சிறு டிப் இது.
கையில் சில பல லட்சங்கள் சேர்ந்த பின்  அடைக்கலாம் என்று காத்திருக்காமல் எப்படி சிறுகச் சிறுக அடைக்கலாம் என்று விளக்குகிறது இப்படம்
உதாரணத்துக்கு 50 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் 25 ஆண்டு காலத்துக்கு எடுத்திருக்கீங்கன்னு வச்சிக்குவோம்.
எவ்வித மாற்றமும் செய்யாமல் இ எம் ஐ மாதா மாதம் செலுத்தி வந்தால் 25 ஆண்டுகளில் கடன் முடியும்
11 மாதங்கள் குறிப்பிட்ட இ எம் ஐ மட்டும் செலுத்தி விட்டு ஒரே ஒரு மாதம் மட்டும் இரட்டிப்பாகக் கட்டினால் ( ஒரு மாதத் தவணை கூடுதல்) 19 ஆண்டுகள் 3 மாதத்தில் கடன்  முடியும்
உங்க மாதத்தவனை 50 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். முதலாம் ஆண்டு முடிவில் கிடைக்கும் சம்பள உயர்வை முழுக்க செலவிடாமல் 2ம் ஆண்டு மாதத் தவணையை 5% உயர்த்தி 52,500 என்று அளவில் கட்ட வேண்டும், அடுத்த ஆண்டு அதிலேருந்து ஒரு 5% உயர்த்தி 55125 ரூபாய் இப்படியே உயர்த்தி வந்தால் 13 ஆண்டுகள் 3 மாதத்தில் கடன் முடிந்து விடும்
மேலே சொன்ன அதே முறையில் 5% க்கு பதில் ஒவ்வொரு ஆண்டும் 10% உயர்த்தி தவணையை கட்டி வந்தால் 25 ஆண்டுகால கடன் வெறும் 10 வருடம் 2 மாதங்களிலேயே முடிந்து விடும்.
ஒவ்வொரு ஆண்டும் தவணையை 10% உயர்த்துவது என்பது வெகு சிலரால் மட்டுமே முடியும், எல்லா ஆண்டும் உயர்த்த முடியாவிட்டாலும் பல ஆண்டுகள் சென்ற ஆண்டை விட 5% பலரால் உயர்த்த முடியும்.
இதில் எதுவுமே முடியாவிட்டாலும் ஆண்டுக்கொரு முறை போனஸிலிருந்தோ சில்லரை சேமிப்பிலிருந்தோ ஒரு மாதத் தவணையை அதிகமாக பெரும்பான்மை மக்களால் கட்ட முடியும்.
உங்க வங்கி மாதாந்திரத் தவணையை மாற்றி அமைக்க தயாராக இல்லையென்றால், அந்தப் பணத்தைச் சேர்த்து வைத்து ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறைகளோ அசலுக்கென தனியாக செலுத்தி வரலாம். 50 ஆயிரம் தவணையை 52500 ஆக உயர்த்த வங்கி ஒத்துக் கொள்ளாவிட்டால், 2500*12 = 30000 ரூபாயை தனியாக ஒருமுறை செலுத்தலாம்.
இது வெறும் கான்செப்ட்தான், உங்களால் எவ்வளவு முடியுமோ அதை அவ்வப்போது அசலுக்காக செலுத்தி வந்தால் நீங்கள் வங்கிக்குத் தரும் வட்டியும் கணிசமாகக் குறையும், வீடும் விரைவிலேயே உங்களுடையதாகும்.
கந்தனின் கவனம் கவட்டையில் என்பது போல் எங்க சுத்தினாலும் கவனம் காப்பீட்டிலேயே இருக்கும். வீட்டுக் கடன் முடியும் வரை கடன் தொகைக்கு ஈடாக ஒரு டெர்ம் பாலிசி எடுத்து வைங்க... குடும்பத் தலைவர் திடீரென இறக்க நேரிட்டால் குடும்பம் வீட்டை இழக்க நேரிடாமல் இருக்க அது உதவும்.
பிற்சேர்க்கை : எது எப்படி சாத்தியம்?  நீங்க கட்டும் மாதாந்திரத் தவணையில் பெரும் பகுதி வட்டிக்கும் சிறு தொகை முதலுக்கும் போகும் (ஆரம்ப காலங்களில்), அதனால் முதல் அதிகம் குறையாது. அடிஷனல் பேமெண்ட் முழுக்க அசலுக்குப் போவதால், அசலும் குறையும் அதனால் வட்டியும் குறையும், கடனும் சீக்கிரம் முடியும். முதல் ஆண்டு 50 லட்சத்துக்கு வட்டி கட்டுவீங்க, ஆண்டு முடிவில் தோராயமா 49.5 லட்சம் இருக்குன்னு வைங்க, அதுக்கு வட்டி கேல்குலேட் செய்வாங்க, டிசம்பரில் 50000 அடிஷனல் பேமெண்ட் பண்றீங்கன்னு வைங்க, 2ம் ஆண்டு 49 லட்சத்துக்குத்தான் வட்டி வரும். இது இப்ப கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், சிஸ்டத்தில் கேல்குலேட் ஆகிக்கிட்டே இருக்கும் லோன் சீக்கிரம் முடிஞ்சிடும்

originally a facebook post of Sriram Narayanan. shamefully copied from https://fb.com/story.php?story_fbid=2330289450336054&id=100000650653569 for my future references

Comments

  1. நல்ல பதிவு இதுபற்றி நான் அடிக்கடி எடுத்துக் கூறினாலும் பையன்களுக்குப் புரிவதில்லை. ஆனால் சீக்கிரம் கடனை அடைக்க முனைந்தால் இன் கம் டாக்ஸ்
    பயனை அடைவதெப்படி? இன்னொரு வீடு வாங்குவதா?எல்லோராலும் இது முடியுமா?
    விளக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. facebookஇல் Sriram narayanan என்பவரின் பதிவுதான் இது. சீக்கிரம் கடனை அடைப்பது நல்லதா கெட்டதா என்பது தீர்மானமாக கூற முடியவில்லை Sriram narayanan இப்பதிவில் குறிபிட்டது போல விவாத்திற்குறியது.

      //இன் கம் டாக்ஸ் பயனை அடைவதெப்படி? // இன்னொரு வீடு வாங்குவது நல்ல தீர்வல்ல என்று கருதுகிறேன்
      சமீபத்திய பட்ஜெட் வருமான வரி slabகளை மாற்றியமைத்திருப்பதால் வருமான வரி திட்டமிடல் இலகுவாகி இருக்கிறது . பொதுவாக PPF, ELSS, Infrastructure Bond போன்றவைகளைப் பயன்படுத்தலாம்.

      வேண்டுமென்றால் ஒரு financial Planner ஆலோசனையை பெறலாம். mutual fund distributors, brokers, insurance agents, bankers போன்ற கட்டணம் வாங்காமல் நிதி திட்டமிடல் ஆலோசனை வழங்குபவர்கள் பொதுவாக தங்கள் commission வருவாயை மனதில் வைத்து செயல்படுவர். எனவே SEBIயின் அங்கீகாரம் பெற்ற நிதித் திட்டமிடலுக்கு கட்டணம் வாங்கும் certified financial plannerஐ கண்டடையலாம்.

      Delete

Post a Comment