மகேந்திரலால் சர்க்கார்

இந்திய அறிவியல் ஆய்வுலக முன்னோடி - மகேந்திரலால் சர்க்கார்.

நவம்பர் 2...இன்று!

       1930 ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு அறிவியல் துறையில் முதல் நோபல் பரிசு கிடைத்தது. 1928ஆம் ஆண்டு, நீல நிற விளைவைக் கண்டறிந்ததற்காக இப்பரிசினைப் பெற்ற  சர் சி வி ராமன் , தனது ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்த Indian Association For the Cultivation of Science நிறுவனத்தையும், அதனைத் தோற்றுவித்த மகேந்திரலால் சர்க்காரையும் பரிசு பெற்ற வேளையில் நன்றியோடு நினைவு கூர்ந்தார். தெற்கு கொல்கத்தா பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனம் தான், இந்தியாவின் மிகப் பழமையான அறிவியல்  ஆய்வு நிறுவனம் ஆகும்.  இயற்பியல், வேதியியல், வானியல் , உயிர் வேதியியல் என பல்வேறு துறை சார்ந்த ஆய்வுக் களமாக இன்றும் அது துடிப்போடு செயல்பட்டு வருகிறது.
           1876 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது, நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக இயங்கி வருகிறது. சர் சி வி ராமன் தவிர, கே.எஸ்.கிருஷ்ணன், மேகநாத் சாகா போன்ற அறிஞர்களும் இங்கேதான் தங்களது விஞ்ஞானப் பார்வையை விசாலமாக்கிக் கொண்டனர். இந்நிறுவனத்தைத் தோற்றுவித்த மகேந்திரலால் சர்க்காருக்கு ஒரு வலுவான கனவு இருந்தது.  அறிவியல் ஆய்வுகளுக்கு  பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்பார்க்கக் கூடாது. மேற்கத்திய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு, எந்த ஒன்றையும் சுயமாக சிந்திக்கும் நிலை வர வேண்டும்; அதற்காக,  நமது பணத்திலேயே ஆய்வு நிறுவனம் ஒன்று  அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.
                     இந்நிறுவனத்தை அமைப்பதற்கான  முயற்சிகளுக்கு, ஈஸ்வர சந்திர வித்யாசாகர் , பக்கிம் சந்திர சட்டர்ஜி உள்ளிட்ட பெரியவர்களும்  முழு ஒத்துழைப்பு தந்தனர். தனது பங்களிப்பான ரூ.1000 உடன்,  பல்வேறு இடங்களில் பெற்ற நன்கொடையினைக் கொண்டு, IACS ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கிய மகேந்திரலால் சர்க்காரின் பெயர், ஒவ்வொரு மாணவனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பெயராகும். 
                  அடிப்படையில் ஆங்கில மருத்துவரான இவர், ஹோமியோபதி மருத்துவத்தை இந்தியாவில் வேரூன்றச் செய்தவர்களில் முதன்மையானவர் ஆவார். விஞ்ஞானப் பார்வை, சமூக சேவை , மருத்துவ ஆய்வு என தன் வாழ்நாளைச் செலவழித்த மருத்துவர் மகேந்திரலால் சர்க்கார் பிறந்த தினம் (1833-1904) இன்று!
                  1833 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 2 ஆம் தேதி கல்கத்தா அருகில் உள்ள பைக்பாரா என்னும் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் இவர்  பிறந்தார். தந்தையை 5வது  வயதிலும், தாயை 9வது வயதிலும் இழந்த மகேந்திரலால் , தாய்மாமனின் வீட்டில் தங்கிப் படித்தார். ஈஸ்வர் கோஷ், மகேஷ் கோஷ் என இரண்டு மாமன்களும் மருமகனின் படிப்பிற்கு உதவினர். அதிக நுண்ணறிவு கொண்ட மாணவராக இருந்த மகேந்திரலாலுக்கு, 1840ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பிற்கு இலவச இடம் கிடைத்தது. பிறகு, உதவித் தொகைக்கான தேர்வில் முதலிடம் பெற்ற இவர், ஹிந்து கல்லூரியில் 1854ஆம் ஆண்டு வரை படித்தார்.
         1854ஆம் ஆண்டு, கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றிய பேராசிரியப் பெருமக்களின் பேரன்பிற்குப் பாத்திரமான மகேந்திரலால்,  மருத்துவப் படிப்பில் முதல் மாணவனாகத் (1854-1860) தேறினார். கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை, கண்கள் தொர்பான வகுப்பில்,  பேராசிரியர் ஆர்ச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் விழித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மகேந்திரலால் சரியான விடையைத் தருகிறார். ஆச்சரியமடைந்த ஆர்ச்சர், தொடர்ந்து விழி தொடர்பான பல்வேறு கேள்விகளைக் கேட்க, அனைத்திற்கும் சரியான விடையைச் சொல்லி, அனைவரையும் வியப்புக்கு ஆளாக்கினார்.
         டாக்டர் ஃபேரெர் உதவி செய்ய, கல்கத்தா பல்கலைக் கழகத்தில், முதலிடத்திற்கான பதக்கத்துடன்  எம்.டி. பட்ட மேற்படிப்பை 1863ஆம் ஆண்டு நிறைவு செய்தார் மகேந்திரலால் சர்க்கார்.  ஆங்கில மருத்துவத்தின் அனைத்து நுட்பங்களையும் அறிந்திருந்த சர்க்கார், மருத்துவப் பணியை புனிதமெனக் கருதினார். அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடின்றி மருத்துவ  சேவையாற்றி வந்தார்.
                    அல்லோபதி மருத்துவர்களால் கைவிடப்பட்ட சில நோயாளிகளை  அதே பகுதியில் ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவந்த பாபு ராஜேந்திர தத் குணமாக்கிய செய்திகள் நகரெங்கும் உலா வந்து கொண்டிருந்தன.  அந்த சமயத்தில் தான்  சர்க்காரும் தன்னை ஒரு அல்லோபதி  மருத்துவராக நிலைப்படுத்திக் கொண்டிருந்தார்.
          1867ஆம் ஆண்டு, வில்லியம் மோர்கன் எழுதிய “The Philosophy of Homeopathy" என்ற புத்தகத்தைப் பற்றி, மருத்துவ இதழ் ஒன்றில்  விமர்சனம் எழுதும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது. நூல் விமர்சனத்தின் வழியாக ஹோமியோபதி  மருத்துவத்தின் பித்தலாட்ட முகமூடியையைக் கிழித்து விடலாம் என்ற எண்ணத்தோடு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார். ஹோமியோபதி என்பது மக்களை ஏமாற்றும் வைத்திய முறை என்று இதுநாள் வரை நம்பியிருந்த அவரது எண்ணத்தை இந்தப் புத்தகம் அடியோடு மாற்றியது. ஒருமுறை, இரண்டு முறை என தொடர்ந்து அந்தப் புத்தகத்தைப் படித்த  சர்க்கார், புதிய முடிவுக்கு வந்தார். ராஜேந்திர தத்தோடு நீண்ட உரையாடல்கள் நடத்தினார்.
                   1867 பிப்ரவரி 16 ஆம் தேதி,  பிரிட்டிஷ் மருத்துவ சங்கக் கூட்டத்தில், “எல்லா வகையிலும் அல்லோபதி மருத்துவ முறையைவிட , ஹோமியோபதியே சிறந்தது” என அறிக்கை வெளியிட்டுப் பேசினார். அல்லோபதி மருத்துவர்களின் கடும் எதிர்ப்பு, அடக்கு முறைகள் யாவற்றையும் மீறி, தனது மனசாட்சி சொன்ன உண்மையின் பக்கமே இறுதி வரை நின்றார்.  தனது ஆய்வு முடிவுகளையும், கட்டுரைகளையும் வெளியிட 1868 ஆம் ஆண்டு, "Calcutta Journal Of Medicine" என்ற மருத்துவ  இதழை  தனி ஆளாகக்  தொடங்கினார்.
                 எல்லாவற்றின் மீதும் அறிவியல் பார்வை கொள்வதுதான், மனிதனின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று சொன்ன சர்க்கார், 1878 ஆம் ஆண்டு IACS  அறிவியல்  ஆய்வு நிறுவனத்தை சொந்தமாக நிறுவினார். அதில்,  1904 வரை மதிப்புமிகு செயலாளராக இருந்த சர்க்கார், ஏறக்குறைய 154 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களை  வரவழைத்து, ஆய்வு மாணவர்களோடு கலந்துரையாடச் செய்தார்.
           மருத்துவம் படிக்கும் போது, 1855ல், ராஜகுமாரி என்பவரைத்  திருமணம் செய்து கொண்டார் மகேந்திரலால் சர்க்கார். 1860ல் பிறந்த இவர்களது ஒரே மகன் அமிர்தலால் சர்க்கார், தந்தைக்குப் பிறகு, ஆய்வு மையத்தின் செயலாளராகப் (1904-1919) பணியாற்றினார். அதன் பிறகு, சர் சி வி ராமன் 14 ஆண்டுகள் அப்பதவியில் இருந்து , அறிவியல் ஆய்வுகளை ஊக்கப்படுத்தினார்.
        அல்லோபதி மருத்துவராக இருந்து - ஹோமியோபதி மருத்துவ முறையினை பின்பற்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த அத்தனை எதிர்ப்புகளையும் உண்மையின் பக்கம் நின்று எதிர்கொண்டார். தனது அன்பான வைத்திய முறையால் மக்கள் மனங்களை வென்றெடுத்தார். அறிவியல் பார்வையால் மாணவர் உள்ளங்களில் இமயமென உயர்ந்து நிற்கிறார்  மகேந்திரலால் சர்க்கார் .
             நோய்வாய்ப்பட்ட காலங்களில் எல்லாம், ஸ்ரீ  ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு இவர்தான் தொடர்ந்து மருத்துவம் பார்த்தார். அறிவியல் பார்வையில் ஆன்மீகத்தை எப்படி அணுகலாம் என்ற விவாதங்கள் இவர்களிடத்தில் தொடர்ந்து நடந்தன.
                இவரது மருத்துவத்தால் குணமடைந்த பலர் தொடர்ந்து நிதி உதவி வழங்கினர். விஜயநகர் மன்னர் மஹராஜ் குமார் வழங்கிய ரூ 40,000 மூலம் விஜயநகர் ஆய்வுக்கூடம் (Vijayanagaram Laboratory) உருவாக்கினார். இப்படியாக, வாழ்நாள் முழுக்க தான் சம்பாதித்த பணம் முழுவதையும் ஆய்வு மைய விரிவாக்கத்திற்கே பயன்படுத்தினார்.
                  இந்திய அறிவியல் ஆய்வுலகின் முன்னோடி என்றழைக்கப்படும் சர்க்காரின் வாழ்வு, ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்தியில் 1904 ஆம் ஆண்டு, பிப்ரவரி 23 ஆம் தேதியொடு நிறைவு பெற்று விட்டது. ஆனால், மனித நேயத்துடன் கூடிய அறிவியல் சிந்தனையின் அடிப்படையில் தான், மானுட சமூகம் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற அவரது எண்ணம் என்றென்றும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
                ஆய்வுச்சிந்தனை என்பது - உண்மையின் பொருட்டு, திறந்த மனதுடன், சுயமானதாக இருக்க வேண்டும்; ஆளும் சர்க்காருக்கு  அடிபணிந்து விடக்கூடாது என்பதுதான் டாக்டர் சர்க்காரின் வாழ்வு நமக்குச் சொல்லும் பாடம்!

Source:  https://fb.com/story.php?story_fbid=1198354860315740&id=100004237117776

Comments